Saturday, October 18, 2014

படித்தில் பிடித்தது! அம்மாவின் அலைபேசி...



அம்மாவிற்கு அலைபேசி ஒன்றை சமீபத்தில் வாங்கிக் கொடுத்தேன்... தினமும் தவறாமல் அம்மாவிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது... "தம்பி பொட்டவத்திலேர்ந்து செல்லு கீழே விழுந்திருச்சுய்யா, எதுன்னா ஆயிறுமா?" "எத்தனை நாளைக்கு ஒருதரம் சார்ஜ் போடணும்?" "100 ரூபாய்க்கு போட்டா காசு எவ்வளவு ஏறும்யா?" என ஒரு குழந்தையாய் மாறி அம்மா கேள்வி கேட்கிறாள். அம்மாவின் சந்தேகங்கள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், பல வேளைகளில் சிந்தனையை தூண்டுகிறது...தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு அலைபேசியை பற்றி அறிந்து கொள்ளவே அம்மா இவ்வளவு கேள்விகள் கேட்கும்போது, இந்த உலகத்தை பற்றி அறிந்துக் கொள்ள அம்மாவிடம் நான் எத்தனை கேள்விகள் கேட்டு இருப்பேன்... 
உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்... 
ஐ லவ் யூ அம்மா....

Saturday, November 26, 2011

Harivarasanam-K.J.Yesudas



Wednesday, December 1, 2010

வாழ்க்கையின் அர்த்தமும் & சாத்தியமும்


பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.ஆனால் அந்தக் கழுகுகளின்   
பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.                                 
  குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும்,   
  சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது 
  மாறி விடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி
  செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பு
  வரை வந்து நிற்கின்றது..                                                                                                                      
 அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது. அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க
  தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க 
 விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே
  ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.                                                                                           
                                                                                                                                                   
  அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல்
  குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும்
  கலையல்ல அது. குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் 
  பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை 
  அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும்,     
  காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது
  . அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.                                                                                   
                                                                                                                                                   
  கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் 
  அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே
  தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது
  .                                                                                                                                                 
                                                                                                                                                   
  ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின்
  பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. 
  கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.                                           
                                                                                                                                                   
  தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்
  கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.         
                                                                                                                                                   
  அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்றுசொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம்  நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்    இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை. ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல    வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது     
  பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.                                                       
                                                                                                                                                   
  அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும். இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை  தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.               
                                                                                                                                                   
 வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து       
 பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.                                                                                

Friday, November 26, 2010

2 G scam detail report by Thuglak article

ம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நம் எல்லோருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசுக்கு இந்த ஊழல் நடவடிக்கையால் வருவாய் இழப்பு ரூபாய் 1,76,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கணக்குகள் தணிக்கைத் துறையின் அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, இந்த ஊழல் விவகாரம் அரசியல் கட்சிகளாலும், பத்திரிகைகளாலும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. ஆனால், 'CAG அறிக்கை' எனப்படும், தணிக்கைத் துறையின் விவரமான அறிக்கை வெளிவந்த பின், எதிர்ப்புகள் உச்சகட்டத்தை அடைந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.


இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் கடுமையான விதிமீறல்கள், ஊழல்கள் பற்றியதாக உள்ளன. இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில், இதுவே மிகப் பெரிய ஊழல் என்று பலராலும் கருதப்படுகிறது. 

நம் நாட்டில் தொலைபேசிகள் லேண்ட் லைன் எனப்படும் கம்பிகளின் மூலம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 1994 வரை இயங்கி வந்தது சரித்திரம். அதன் பின், முதல் முறையாக, பிற நாடுகளில் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்புகளினால் 'ஒயர்லஸ்' எனப்படும் கம்பியில்லா டெலிஃபோன்களையும், 'கைபேசி' எனப்படும் செல்ஃபோன்களையும் உருவாக்க கொள்கை முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில்தான், பொருளாதார தாராளமயக் கொள்கையும், பெரிய அளவில் அமலுக்கு வந்தது. இதனால், அதுவரை மத்திய அரசின் ஏக போகத்திலிருந்த டெலிஃபோன் தொழிலில், தனியார் கம்பெனிகளையும் அரசு ஈடுபடுத்தியது. 

ஒயர்லெஸ் செல்ஃபோன்கள் இயங்க, 'ஸ்பெக்ட்ரம்' என்ற அலைக்கதிர்கள் அவசியம். அதாவது, வானவெளியில், இயற்கையிலேயே 'ரேடியோ ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரம்' எனும் அலைவரிசை உள்ளது. இது உலகெங்கிலும் வியாபித்திருப்பதால், இதை உபயோகித்து ஒயர்லஸ் கருவிகள் மூலம் செல்ஃபோன்களை இயக்கலாம். இதைப் பன்னாட்டு டெலிஃபோன்கள் சங்கம் (ஐ.டி.யு.) என்ற அமைப்பு, எந்த நாட்டிற்கு எந்த அளவு அலைக் கதிர்கள் என்று நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யும். 

நம் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை KHz (கிலோ ஹெர்ட்ஸ்) முதல் 400 GHz (கிகா ஹெர்ட்ஸ்) வரை. 

ஒரு நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் மற்ற நாடு இயங்கக் கூடாது. காரணம், ஒன்றையொன்று பாதித்து, மொத்த உபயோகமும் தடைப்பட்டு விடும். இதுபோன்ற அலைக் கதிர்களை, பெரும்பாலும் இந்திய ராணுவம் பழைய காலங்களில் தங்கள் தொலைத் தொடர்புக்கு ஒயர்லஸ் கருவிகள் மூலம் பயன்படுத்தி வந்தது. பின், அவை தனியார் மற்றும் அரசு தொலைபேசி கம்பெனிகளின் செல்ஃபோன் உபயோகத்திற்கு ஒதுக்கி விடப்பட்டன. இவற்றைத் தனியார் கம்பெனிகளுக்கு விடுவதில் 2001ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஒருமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகை, அலைவரிசை லைசென்ஸ் தொகையாக வசூலிக்கப்பட்டது. 
அந்த ஆண்டு முதல் தனியார் கம்பெனிகள் செல்ஃபோன்களை அறிமுகம் செய்தன. யாருமே எதிர்பாராத வகையில் செல்ஃபோன்கள் உபயோகம் நம் நாட்டில் அதிகரித்தது. இதில் உலகிலேயே நம் நாடு இரண்டாவது இடம் என்றும், சைனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செல்ஃபோன்கள் உள்ள நாடு இந்தியா என்றும் சர்வே கூறுகிறது. 

2001ஆம் ஆண்டு, முதலில் இரண்டு வகையான ஒயர்லஸ் அலைக் கதிர்கள், சி.எம்.டி.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். அமல்படுத்தப் பட்டன. பெரிய கம்பெனிகள், சில சி.எம்.டி.ஏ. சர்வீஸை விட ஜி.எஸ்.எம். வளர்ச்சியே சிறந்தது என்ற கணக்குடன், தங்களுக்கும் புதிய ஜி.எஸ்.எம். லைசென்ஸ்கள் வேண்டும் என்ற வகையில் காய் நகர்த்தின. 

இதே வேளையில், இரண்டு விஷயங்கள் உருவாயின. ஒன்று செல்ஃபோன்களின் உபயோகம் மிகவும் அதிகமானது. மேலும், எஸ்.எம்.எஸ். என்ற செய்திக் குறிப்புகள் போக, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற புதிய அம்சங்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாயின. இதுபோன்ற சேவைகளுக்கு, அலைக்கதிர்களின் அடுத்த தலைமுறை, இரண்டாம் ஜெனரேஷன் எனப்படும் 2ஜி திட்டமிடப்பட்டது. 

இந்த 2 ஜி அலைக்கதிர் ஒதுக்கீடு வருவதைத் தெரிந்து கொண்டு, ஏற்கெனவே டெலிஃபோன் வியாபாரத்தில் இங்கு இயங்கி வரும் இந்தியக் கம்பெனிகளும், வெளிநாட்டுக் கம்பெனிகள் சிலவும், டெலிஃபோன் வியாபாரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல கம்பெனிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கி, லைசென்ஸ் பெற முயற்சித்தன. 
பல கோடி ரூபாய்கள் கைமாறி, பல விதிமீறல்களின் மூலம், சிலர் லைசன்ஸ் பெறுகின்றனர். இதில் நடைபெற்ற முறைகேடுகளில் முதன்மையானது, 2001ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட லைசென்ஸ் கட்டணத்தையே 2008ஆம் ஆண்டு வசூலித்ததுதான். 
2001– ஆம் ஆண்டு நம் நாட்டில் டெலிஃபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு 35 கோடி சந்தாதாரர்களாக அது உயர்ந்தது. எனவே, 2001 ஆம் ஆண்டு ஒரு செல்ஃபோன் / டெலிஃபோன் கம்பெனியின் வியாபார வருமானம் எவ்வளவு இருந்திருக்க முடியுமோ, அது சுமார் 88 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், 2001 ஆம் ஆண்டு விதித்த லைசென்ஸ் கட்டணத்தைத்தான் நான் வசூலித்தேன் என்று அத்துறையின் அமைச்சர் கூறுகிறார். 
அது எவ்வளவு தூரம் தனியார் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தந்தது என்பதைக் கணக்கிட்டுள்ளது தணிக்கைத் துறையின் அறிக்கை. ஸ்வான் என்ற கம்பெனி இதற்கு முன் டெலிஃபோன் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. அமைச்சரின் உதவியுடன் 13 சரகங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வெற்றிகரமாகப் பெற்ற கம்பெனி இது. ஒதுக்கீடு லைசென்ஸ் பெற்று சேவையை தொடங்கும் முன்னரே, தனது பங்குகளில் 50 சதவிகிதத்தை ரூ.3597.50 கோடிக்கு விற்று விட்டது இந்தக் கம்பெனி. அதன்படி பார்த்தால், இக்கம்பெனியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 7195 கோடி.
இந்த மதிப்பீட்டைக் கூர்ந்து நோக்கினால், இந்தக் கம்பெனியிடம் செல்ஃபோன் சேவையை வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடையாது என்பது தெரியும். அதாவது, எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான செல்ஃபோன் டவர்கள், மற்ற பல கருவிகள் வாங்க, இதுபோன்ற ஒரு கம்பெனிக்கு ரூபாய் 25,000 கோடி முதல் 35,000 கோடி வரை தேவைப்படலாம். 
இதில் எதையும் செய்யாமல், இக்கம்பெனியின் மதிப்பீடு ரூபாய் 7195 கோடி என்றால், அந்த முழுத் தொகையும் இந்தக் கம்பெனி பெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையின் மதிப்பீடுதான். அந்த மதிப்பீட்டிற்கு இந்தக் கம்பெனி அரசுக்குச் செலுத்திய லைசென்ஸ் கட்டணம் ரூபாய் 1651 கோடி மட்டுமே. 
இதைப் போலவே யுனிடெக் என்ற கம்பெனி, ரூ.6120 கோடி மதிப்பீடுள்ள 2ஜி அலைவரிசைகளை ரூ.1651 கோடி செலுத்திப் பெற்றுள்ளது. இந்த வகையில் 2008ஆம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை 122 லைசென்ஸ்களை வழங்கியுள்ளது என்றால், அவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான். 
மேலும், இந்த 122 லைசென்ஸ்களில், 85 லைசென்ஸ்கள், தகுதியில்லாத கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல கம்பெனிகள் தவறான தகவல்களை அளித்திருந்தும், அவற்றை வேண்டுமென்றே, சரியானபடி ஆய்வு செய்து நிராகரிக்காமல், லஞ்ச ஊழல் காரணமாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
இதுபோக, லைசென்ஸ் வழங்க தவறான ஒரு அணுகுமுறையும் கையாளப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு 575 விண்ணப்பங்கள் வந்தன. அமைச்சரின் தலைமையில் அதிகாரிகள் கூடி, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள்தான் பரிசீலிக்கப்படும் என்று கூறி விட்டனர். அதன்படி, 232 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 
இந்த விண்ணப்பங்களின் குறைபாடுகளை எல்லாம் சரியாக ஆராயாமல், ஒரே நாளில் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 10ஆம் தேதி 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இந்தக் கம்பெனிகள் இவ்வாறு லைசென்ஸ் பெறுவதற்குத் தேவையான தொகையை, அன்றைய தினமே செலுத்த வேண்டும் என்ற பத்திரி கைச் செய்தியை, மதியம் 2.45 மணிக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிடுகிறது. ஆனால், செலுத்த வேண்டிய கடைசி நேரம் மதியம் 3.30 மணி. அதாவது வெறும் 45 நிமிடங்களில்! 
நமது கிராமங்களில், கிராம அதிகாரிகளிடமோ அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திலோ வரி செலுத்தும் போதுகூட, இதுபோன்ற கோமாளித்தனமான அறிவிப்புகள் வருவது இல்லை. அகில இந்தியா அளவிலும் வேறு பல நாடுகளிலுமுள்ள பல டெலிஃபோன் கம்பெனிகளுக்கு, லைசென்ஸ் வழங்கியதைக் கூர்ந்து நோக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர் ஒதுக்கீட்டு நடைமுறையில் இதுபோன்ற கோமாளித்தனங்கள் நடந்திருப்பதைக் கண்டு, எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதை விடவும் கேலிக்குரியது – சில கம்பெனிகள் அன்றைய தினத்தில் (10.1.2008) 45 நிமிடங்களில் சரியான தொகைக்கு பேங்க் டிராஃப்ட்டை தொலைத் தொடர்புத் துறைக்குக் கொடுத்துள்ளன. இந்த டிராஃப்ட்கள் ஏற்கெனவே பல நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததாம். ஒரு கம்பெனியின் டிராஃப்ட் மும்பை வங்கி ஒன்றில் எடுக்கப்பட்டிருந்ததாம். 

ஆக, என்ன மாதிரியான அறிவிப்பு வரும் என்பதை இவர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. அதாவது, சரியான சிபாரிசுடன், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால், நடைமுறைகள் எப்படி இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே தெரிவித்து விடுவார்கள் என்பது ஊழல் நடவடிக்கையின் அடிப்படை. 

லைசென்ஸ் வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை என்ற நடைமுறை என்றால் - (ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்ட்) விண்ணப்பங்கள் தபாலில் பெறப்படும்போது, அவற்றை ரெஜிஸ்டரில் வரிசையாக எழுதி, வரிசையாக டோக்கன் எண்ணிட்டு, அதன்படி வரிசைக்கிரமமாக பரிசீலனை செய்யப்படும். 

இதுவரையிலும் மத்திய அரசின் துறைகளில் நடைமுறையில் இருக்கும் பழக்கம் லைசென்ஸ் கொடுக்கும்போது, விண்ணப்பங்களை இது போல் பரிசீலனை செய்தபின் முதலில் LOI எனப்படும் Letter of Intent என்ற முதல் கட்ட அனுமதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்டவர்கள், டெபாசிட், லைசென்ஸ் தொகை, இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு முழுமையாக லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால், இதன்படி Letter of Intent பெற்றவர்கள் 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி, முக்கால் மணி நேரத்தில் எல்லா சான்றிதழ்களையும் வழங்குமாறு பத்திரிகைச் செய்தி அனுப்பப்பட்டது. 

இதன்படி பயில்வான்கள் போன்ற அடியாட்கள் கம்பெனிகளின் சான்றிதழ்களையும், வங்கி ட்ராஃப்ட்களையும் கொண்டு வந்து முண்டியடித்துக் கொண்டு கௌண்டரில் செலுத்திய கேலிக் கூத்து, 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி தொலைத் தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அரசுக்கு வேண்டியவர்களுக்கும், கையூட்டுப் பெற்றவர்களுக்கும் செய்யப்பட்ட வசதி இது என்பது சொல்லாமலே தெரியும்.